ஃபானி புயலில், ஒடிசா மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபானி புயலின் கோரத் தாண்டவத்தால், ஒடிசாவில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஃபானி புயலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புரி மாவட்டத்தில் மட்டும் 21 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரி மாவட்டம், குர்தா மாவட்டம் ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் குடும்பங்களுக்கு 50 கிலோ அரிசி, 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாலித்தீன் ஷீட்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு, தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் 11 கோடி ரூபாயும் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தலா 10 கோடி ரூபாயும் குஜராத் 5 கோடி ரூபாயும் அறிவித்துள்ளன.