வரலாற்றுப் பெருமையும், பாரம்பரியப் புகழும் உடைய மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை புனரமைக்கும் வேலைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. பிரம்மாண்ட தூண்கள்… அழகான வடிவமைப்பு… பாரம்பரியப் பெருமிதம்… என தமிழக கட்டிடக்கலை வரலாற்றில் திருமலை நாயக்கர் அரண்மனைக்கென தனித்துவமிக்க சிறப்புகள் பல உள்ளன. ஆங்கிலேயர் வருகைக்கு முன் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில், திருமலை நாயக்க மன்னர் கட்டியதுதான் இந்த அரண்மனை. அதனால், அவர் பெயரிலேயே திருமலை நாயக்கர் அரண்மனை என்றும், நாயக்கர் மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி.1623 ஆண்டு தொடங்கி கி.பி 1659-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட இந்த அரண்மனை, இந்தோ சாரசனிக் மற்றும் முகலாயக் கட்டிடக் கலையின் சிறப்புக்களை உள்வாங்கிக் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனையும், ராணி மங்கம்மாள் அரண்மனையும் நாயக்க மன்னர்களின் கட்டிடக் கலைக்கு இன்றும் சான்றாகத் திகழ்கின்றன.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் திருமலை நாயக்கர் அரண்மனை, 1971-ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி-ஒளிக் காட்சிகள், ஒரு மணி நேர நிகழ்வாக சுற்றுலாத்துறை மூலம் ஒளிபரப்பப்படும். அதில், மதுரையின் வரலாறு, நாயக்க மன்னர்களின் ஆட்சி முறை பற்றி தெளிவாக எளிமையாக அனைவரும் தெரிந்துகொள்ளும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சிறந்த திட்டத்தை திருமலை நாயக்கர் மஹாலில் கொண்டுவர வித்திட்டவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழ் வைப்பகம் ஒன்றும் இந்த அரண்மனையில் செயல்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்கு வைக்கப்பட்டு, அதை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் அழகைக் காண, நாளொன்றுக்கு சராசரியாக 2000 பேர் வருகை தருகின்றனர். பருவ காலத்தை பொறுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்ற-இறக்கம் இருக்கும். குறிப்பாக, ஐரோப்பியர்கள் அதிகளவில் திருமலை நாயக்கர் அரண்மனையைக் காண வருவதுண்டு.
இத்தனை சிறப்புக்களை உடைய திருமலை நாயக்கர் அரண்மனையை பருவநிலை மாற்றம், அதிகளவிலான மனித வருகை போன்றவை சிதிலமடைய வைக்கத் தொடங்கின. குறிப்பாக கட்டடத்தை சுமந்து நிற்கும் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும், மேல் மாடமும் சேதமடைந்து, விரிசல் விடத் தொடங்கின. அதையடுத்து, ஆசிய வங்கி உதவியுடன் 3 கோடி ரூபாய் செலவில் திருமலை நாயக்கர் அரண்மனையை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த அந்த வேலைகள், ஊரடங்கு காரணமாக தாமதமானது. மேலும், சிமெண்ட் மூலம் செய்யப்பட்ட புதுப்பிப்பு பணிகள் பலனளிக்காததால், கட்டடம் கட்டப்பட்ட அதே பாணியில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுண்ணாம்பு கரைசலுடன் மணலைக் கலந்து, அந்தக் கலவையை 15 நாட்கள் ஊற வைத்தபின், பூச்சுப் பணியைத் தொடங்க முடிவுசெய்யப்பட்டது. அதற்காகப் பாத்திகள் அமைத்து சுண்ணாம்பு கரைசல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், பனங்கருப்பட்டிப் பால் மற்றும் கடுக்காய் பொடி கரைசலும் சேர்க்கப்பட்டு பூச்சுப் பணி தொடங்க உள்ளது.
அடுத்து வரும் 3 மாதங்களில் பணிகளை முடிக்கும் வேகத்தில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், அடுத்துவரும் 50 ஆண்டுகளுக்கு மகாலின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர் தொல்லியல் துறை வல்லுநர்கள். மேலும், அரண்மனையின் சேதத்திற்கு அங்கு தங்கியுள்ள புறாக்கள் இடும் எச்சமும் முக்கியக் காரணம் என்று கருதப்படுவதால், மஹாலில் உள்ள திறந்தவெளி மாடம் மற்றும் மகாலை சுற்றியுள்ள 70 மாடங்களை வலை கொண்டு அடைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் தொல்லியல் துறையின் மண்டல உதவி இயக்குனர் சக்திவேல்.
400 ஆண்டு கால வரலாறும், மதுரையின் அடையாளமாகவும் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனையை சீர்படுத்தும் வேலைகளைத் தமிழகத் தொல்லியல் துறை தொடங்கியிருப்பது, மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.