திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறையையொட்டி, அங்கு கூட்டம் களைகட்டி வருகிறது. இந்நிலையில் பழனி பேருந்து நிலையம், தேவர்சிலை, சரவண பொய்கை, சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து எச்சரிக்கை விடப்பட்டாலும், கடை உரிமையாளர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை செய்து வந்த நிலையில், நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போலீசார் உதவியுடன் நடைபெற்ற இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றத்தால், ஆக்கிரமிப்பு செய்துவந்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.