தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், புரட்சித் தலைவரின் மனைவியுமான ஜானகி ராமச்சந்திரன் நினைவு தினம் இன்று.. வெறும் 24 நாட்கள் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்த அவரது 25-வது ஆண்டு நினைவுதினம் இன்று என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
வைக்கம் நாராயணி ஜானகி என்றால் நம்மில் பலருக்கு தெரியாது, ஆனால் வி.என்.ஜானகி என்றால் ஒட்டுமொத்த மாநிலமே அறியும். 1923-ம் ஆண்டு பிறந்த அவர், 1936-ம் ஆண்டு சென்னைக்கு குடிபுகுந்தார். கே.சுப்ரமணியம் இயக்கிய இன்பசாகரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தடம்பதித்தார். தொடர்ந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த ஜானகி சகட யோகம் என்ற திரைப்படத்தில் கதையின் நாயகியாக தோன்றினார். 1947-ம் ஆண்டு வெளிவந்த ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி வாயிலாக முன்னணி நடிகையானார்.
1948-ல் வெளிவந்த ராஜ முக்தி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாதாரண நட்பு, அதே ஆண்டில் வெளியான மோகினி படத்தில் காதலாக மாறியது. 1950-ல் வெளியான மருதநாட்டு இளவரசி மற்றும் நாம் உள்ளிட்ட படங்களிலும் சேர்ந்து நடித்தனர். பின்னர், படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜானகி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணையானார்.
கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் உதவும் குணத்துக்கு ஜானகி எப்போதும் துணை நின்றவர். 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நோய்வாய்பட்டபோது, முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையிலும் பக்கமிருந்து கவனித்து அவரை மீட்டுக் கொண்டு வந்தவர் ஜானகி.
ஆனால் 1987 டிசம்பர் 24-ல், தமிழர்களை நிலைகுலைய வைத்தது எம்.ஜி.ஆரின் மறைவு. தொடர்ந்து ஆளுநர் குரானாவின் அழைப்பை ஏற்று, முதலமைச்சராக பதவி ஏற்றார் ஜானகி அம்மையார். தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.
பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளாதோர் பள்ளி நிர்வாகத்தை கவனித்து வந்தார். 1996 ம் ஆண்டு மே 19-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார். புரட்சித் தலைவரை பேசும் ஒவ்வொரு பொழுதும் வி.என்.ஜானகியின் பெயரும் கூடவே நிலைத்து நிற்கும்…