ராமநாதபுரத்தில் நீண்ட நாட்களாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு ஆயிரத்து 500 அடிக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து நிரந்தர தீர்வு வழங்கிய மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் மீனவ கிராமமான திருப்பாலைக்குடியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக இப்பகுதி மக்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் மக்களின் பங்களிப்பாக 7 லட்சம் ரூபாயுடன் 23 லட்சம் ரூபாய் மதிப்பீல் முஸ்லிம் குத்துபா தொழுகை திடலில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த பணி முடிவடைந்ததன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.