மத போதகர் ஜாகிர் நாயக்கின் குடும்பத்துக்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை அதிரடியாக முடக்கியுள்ளது. மதங்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படும் வகையில் பேசியதாக மத போதகர் ஜாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது. அவரது முஸ்லிம் ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்டவிரோத அமைப்பாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவரும் ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கருப்புப் பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக் குடும்பத்துக்கு சொந்தமாக மும்பை மற்றும் பூனேவில் உள்ள 16 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 50 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.