நிவாரணப் பொருட்கள் வழங்க தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கவும், முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எந்தவொரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரை அணுகலாம் என்றும், தன்னார்வ அமைப்பு வழங்கும் நிவாரணப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் தன்னார்வலர்கள்
மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதியோர், மாற்றுத் திறனாளிகள், நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கிட, இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் அரசிடம் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல என்றும், நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு ஏற்கெனவே வெளியிட்ட செய்திக்குறிப்பில், குறிப்பிடப்பட்ட அம்சங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர், வைகோ மற்றும் கே.எஸ்.அழகிரி போன்ற தலைவர்கள், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை விதித்து விட்டது போல் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் அரசு, எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழ்நாடு அரசின் இந்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.