ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிட்டார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளன…
ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் பிரிவான ஜியோ பிளாட்பார்மில், 7 .7 சதவீத பங்குகளை கூகுள் நிறுவனம் வாங்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் ரிலையன்ஸ்சில், கூகுள் 33 ஆயிரத்து 737 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். நிகர கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் இந்தியாவிலேயே அதிகம் வருமான வரி செலுத்தும் தனியார் நிறுவனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகத் தரத்தில் 5 G சேவையை வழங்குவதற்கு ஜியோ தயாராக உள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அடுத்த ஆண்டு முதல் துவங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம், நெட் பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், யூ டியூப் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்கள் மற்றும் டிவிக்களை உள்ளடக்கிய ஜியோ ப்ளஸ் இந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரே USER ID மற்றும் PASSWORD மூலம் அனைத்து ஓடிடி தளங்களையும் கண்டு ரசிக்க முடியும்.
மேலும் மெய் நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஜியோ கிளாஸ் (JIO GLASS) அறிமுகம் செய்யப்பட்டது. 75 கிராம் எடை கொண்ட இந்த ஜியோ கிளாசில், உள்ள 3D ஹோலோகிராபிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மெய்நிகர் முறையில் பாடங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியும்.
ரிலையன்ஸ் நிறுவனமும், கூகுளும் இணைந்து இந்தியாவில் குறைந்த விலையில் அதிநவீன ஸ்மார்ட் போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக, சமீபத்தில் அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தரம் பிச்சை அறிவித்திருந்தார். அதன் முதல்கட்டமாக ரிலையன்சின் பங்குகளை கூகுள் வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.