கூகுள், ஆல்ஃபபெட் நிறுவனத்தில் தலைமை பதவி: சுந்தர் பிச்சையின் சம்பள விவரங்கள் வெளியீடு

கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியும், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சமீபத்தில் பொறுப்பேற்றவருமான, சுந்தர் பிச்சையின் சம்பள விவரங்கள் வெளியாகி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சுந்தர்பிச்சை கடந்த 3ஆம் தேதி, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.
 
கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி பதவியை மட்டுமே வகித்த போது, கடந்த 2016ஆம் ஆண்டில், சுந்தர் பிச்சை 20 கோடி டாலர் ஊக்கத் தொகையைப் பெற்றார். 2018ஆம் ஆண்டில் அவரே ’ஏற்கனவே நிறைய பெற்றுவிட்டேன் ஊக்கத் தொகை வேண்டாம்’  – என்று மறுக்கும் அளவுக்கு, அவரது ஊதியங்களும், ஊக்கத்தொகைகளும் தொடர்ந்து அதிகரித்தன. இதனால் கூகுள் நிறுவனத்திலேயே சுந்தர் பிச்சையின் சம்பள உயர்வுகளுக்கு எதிர்ப்புகள் வந்ததாகக் கூட தகவல்கள் கசிந்தன.
 
இந்நிலையில் தற்போது ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை பொறுபேற்று உள்ளதால், இனி அவரது சம்பளம் என்னவாக இருக்கும்? – என்ற கேள்வி இணைய உலகில் வெகுவாக எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடை தற்போது கிடைத்து உள்ளது.
 
எஸ்.இ.சி. எனப்படும் அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்திடம் ஆல்ஃபபெட் நிறுவனம் சமர்ப்பித்த தகவல்களில் இருந்து, சுந்தர் பிச்சையின் சம்பள விவரங்கள் தெரிய வந்துள்ளன. இதன்படி சுந்தர் பிச்சைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு ஊதியம் 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய்க்கு இணையானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறுவன செயல்பாடுகளைப் பொறுத்து, அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகையின் மதிப்பு, 24 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து எழுநூறு கோடி ரூபாய்க்கு இணையானது.
 
இதில் 9 கோடி டாலர்களை சுந்தர் பிச்சை முதற்கட்ட ஊக்கத்தொகையாக தற்போது பெற்று உள்ளார். வரும் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் மீத 150 கோடி டாலர்கள் அவருக்கு இரு தவணைகளில் வழங்கப்பட உள்ளது. இந்த தகவல் மென்பொருள் நிறுவனங்களின் சம்பள முறைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் ஆல்ஃபபெட் நிறுவனம், ஒருவருக்கு செயல்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்குவது, இதுவே முதன்முறையாக உள்ளது. இனி இதனை இன்னும் பல நிறுவனங்கள் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளன.

Exit mobile version