புதிய தளர்வுகளின் படி அனைத்து மாவட்டங்களிலும் உணவகங்கள், தங்கும் விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
டீக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்படலாம்.
அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள், நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அமர்ந்து உணவு அருந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதே நேரம், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள், விளையாட்டு கூடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும், மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்களுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாய, அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கும் தடை தொடர்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.