ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்காளாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி மளிகை, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் பகல் நேரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் காலையிலேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். சென்னை அண்ணாசாலையில் வழக்கம்போல் இயங்கிய வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். வியாபாரிகள் கூட்ட நெரிசலால் கோயம்பேடு காய்கறி சந்தையில் பாதுகாப்பான இடைவெளி காற்றில் பறந்தது. கோயம்பேடு செல்லும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்ததால் நெரிசலில் ஸ்தம்பித்தன.
இதேபோல், திருவள்ளூரில் சாலைகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் வழக்கம் போல் இயங்கின. கடந்த ஒருவாரமாக தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் தொற்று அதிகரிக்ககூடும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் வராத நிலையில், தளர்வை பயன்படுத்தி வாகன ஓட்டிகளில் சாலைகளில் படையெடுத்தனர். காவல்துறையினர் எந்த வித சோதனைகளிலும் ஈடுபடாததால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு மற்றும் மேற்கு ரத வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடினர். சாலைகளில் வழக்கம்போல் வாகன நெரிசல் காணப்பட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.