காரை ஓட்ட உறவினர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர், அந்தகாரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் வசித்து வருபவர் டோமினிக். இவருக்கு பிரின்ஜின் என்ற மனைவியும், டார்வின் என்ற மகனும் உள்ளனர். டோமினிக், பஜாஜ் அலைன்ஸ் நிறுவனத்தில் காப்பீட்டு ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக, கார் ஒன்றை டோமினிக் வாங்கியுள்ளார். அப்போது டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்விஸ் என்பவரை, டோமினிக்கின் மகன் டார்வின் காரில் ஏற்றவும், ஓட்டவும் கொடுக்வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜர்விஸ் கீழே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். அதனையடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஜர்வீஸ் மீது டோமினிக் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜர்வீசுக்கும், டார்வீனுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு 1 மணியளவில் டோமினிக் வீட்டருகே காரில் நண்பர்களுடன் வந்த ஜர்விஸ், திடீரென்று, தான் எடுத்துவந்திருந்த பெட்ரோலை டோமினிக்கின் கார் மீது ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடி உள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் எரிந்து கொண்டிருந்த காரை உடனடியாக அணைத்தனர். இச்சம்பவத்தில், காரின் டயர் பகுதி முழுவதும் எரிந்துள்ளது. இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளைக்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.