இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறைவாசிகள் சிறைக்குள் அனுமதிக்கப்படும் போதே முறையாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சிறைவாசிகளுக்கு மூச்சுத் திணறல், இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து சிறைவாசிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறைத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார். சிறைவாசிகள் முறையாக கைகளை சுத்தம் செய்கிறார்களா என்பதை பணியில் உள்ள காவலர்கள் கண்காணிக்கவும் வலியுறுத்தியுள்ளார். நன்னடத்தை உள்ள சிறைவாசிகளுக்கு நடத்தப்படும் சிறப்பு நேர்காணல் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், சிறைவாசிகள் நீதிமன்றங்களில் நேரில் ஆஜர்படுத்துவதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சிறை மருத்துவமனை, சிறை வளாகம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் சிறைத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள், கிளை சிறைகளில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க இன்று முதல் தடை விதித்து சிறைத்துறை டிஐஜி முருகன் உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு வரும் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று, கைதிகளுக்கும் பரவக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சந்திக்க வரும் குடும்பத்தினர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். மேலும், சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்படுவதாகவும் டிஐஜி தெரிவித்துள்ளார்.