நித்தியானந்தா தொடர்பான ஆய்வு அறிக்கையை ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சுவாமி நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், அவர் ஹைதி தீவிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நித்தியானந்தாவின் சர்ச்சை வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பன், பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். இதன் விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து நித்தியானந்தா விலக்கு பெற்றார். இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை லெனின் கருப்பன் நாடினார். இதனை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா இருக்கும் இடத்தை வரும் 18ஆம் தேதிக்குள் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் எச்சரித்தனர். இந்நிலையில் நித்யானந்தா தொடர்பான ஆய்வு அறிக்கையை ஒப்படைக்க மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.