நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று, மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வுக்கு முன் நடைபெற்றது.
அப்போது, கருணை மனு உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை என்று குற்றவாளி முகேஷ் குமார் சிங் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, முகேஷ் குமார் சிங் சமர்பித்த ஆவணங்களின் அடிப்படையிலேயே கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என வாதிட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட இருக்கிறது.