தருமபுரியில் 6 ஏரிகள் புனரமைப்பு: தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டி, 6 ஏரிகளுக்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி உள்ள தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த 1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் காட்டோடையின் குறுக்கே கோம்பை மாரியம்மன் கோவில்பள்ளம் அணைக்கட்டு கட்டப்பட்டது. 3.65 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அணைக்கட்டில் இருந்து செல்லும் கால்வாய் மூலம் திம்மலகுந்தி ஏரி, நாயக்கன் ஏரி, புது ஏரி, பக்கிரி ஏரி, சின்ன பெரமனேரி, ஏலகிரி ஏரி என 6 ஏரிகளில் மூலம் 388 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்றுவந்தன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல், அணைக்கட்டும் உடைந்து சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் வரும் உபரி நீர் ஏரிகளுக்கு கிடைக்காமல் வனப்பகுதி ஓடைகளுக்கு வீணாக சென்றது. இதையடுத்து, அணைக்கட்டு சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த திட்டத்துக்காக, 2 கோடியே 95 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து அரசாணை வழங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக மாரியம்மன் கோவில்பள்ளம் அணைக்கட்டை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version