மும்பை தேர்வு மையத்தில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 69 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலனை கருதி தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மும்பையிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி மும்பையில் உள்ள பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றில் இருந்து பள்ளி மாணவர்களை காத்திடும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மும்பையில் தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது மதிப்பெண்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையின் படி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.