நாசா இணையத் தளத்தில் பெயரைப் பதிவு செய்ய செப். 30 கடைசி நாள்

செவ்வாய்க்குப் பெயர்களை அனுப்பும் புதிய திட்டத்தை நாசா அறிவித்துள்ள நிலையில், இதுவரை சுமார் 90 லட்சம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா உட்படப் பல நாடுகளும் பல செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டம் தான் ரோவர் 2020 திட்டம். நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன ரோவர் 2020 செவ்வாயில் உள்ள தட்பவெட்ப நிலை, உயிரியல் மூலக்கூறுகள் போன்றவற்றை ஆராய்வதற்காக அனுப்பப்படுகிறது. அதனோடு செவ்வாய்க்கு ஒரு மைக்ரோ சிப்பை நாசா அனுப்ப இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு ஜூலையில் பூமியிலிருந்து புறப்படும் ரோவர் பிப்ரவரி 2021ஆம் ஆண்டு செவ்வாயைச் சென்றடையும். இந்த விண்கலத்தில் தான் நாசாவிடம் விண்ணப்பித்துள்ள பெயர்கள் அனுப்பப்பட உள்ளன. உங்கள் பெயரை நீங்கள் செவ்வாயில் பதிக்க விரும்பினால் உங்களது பெயரை நாசாவின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்திற்குச் சென்று இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். ரோவரோடு அனுப்பப்படும் அந்த சிப்பில் நானோ எழுத்துக்களால் பதிவு செய்பவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு ரோவரோடு செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்படும். இது போல நானோ எழுத்தில் ஒரு சிலிக்கான் சிப்பில் ஒரு மில்லியன் பெயர்களை எழுத முடியுமாம். ஏராளமான மக்கள் தங்கள் பெயரை இதில் பதிவு செய்து வருகிறார்கள். செவ்வாயில் கால் வைக்கிறோமோ இல்லையோ பெயரையாவது வைக்கும் நோக்கத்தில் உலகம் முழுவதிலுமிருந்து விண்ணப்பித்து வருகிறார்கள். பெயரைப் பதிவு செய்யக் கடைசித் தேதி செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியாகும். இந்நிலையில், இதுவரை சுமார் 90 லட்சம் பேர் தங்கள் பெயரை நாசாவின் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. இதில் 12 லட்சம் பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Exit mobile version