தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருந்து டிடிவி தினகரனை விடுவிக்க மறுப்பு

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை விடுவிக்க முடியாது என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும், சதி திட்டம் தீட்டுதல், மோசடி, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி, சாட்சியங்களைக் கலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்ட சுகேஷ் சந்திரசேகரன், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, குமார் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கும் முகாந்திரம் உள்ளது என்று கூறிய நீதிமன்றம், இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நந்துசிங், லலித் குமார் உட்பட 5 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து, இந்த வழக்கில் டிசம்பர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version