கார்ப்ரேட் வரியை மத்திய நிதி அமைச்சகம் சுமார் 8 சதவீதம் வரை குறைத்திருப்பதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெரிய அளவில் ஈர்க்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சரிவில் இருந்து மீட்க மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், பங்குச் சந்தையானது, அண்மையில் தொடர் சரிவில் சென்று கொண்டிருந்தது. இதனை மீட்க கடந்த வியாழன் அன்று பெரு நிறுவன வரி, 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்த வரி விகிதம் தெற்காசிய நாடுகளிலேயே இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த வரி விகிதம் என்றும், இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக இருக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வரிக்குறைப்பின் மூலம் அரசுக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு என்றும், இதனை வெளிநாட்டு முதலீட்டின் மூலம் ஈடுகட்ட முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.