வரும் 30 மற்றும் மே 1 ஆகிய இருநாட்கள் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலுக்கு ஃபானி எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரெட் அலெர்ட் விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் உச்சபட்ச எச்சரிக்கையை விடுத்துள்ளது. 115 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய கஜா புயலின் வேகத்துக்கு இணையாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனிடையே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.