மும்பையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள தானே, பத்லாபூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தானே மாவட்டத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கிய மஹாலஷ்மி விரைவு ரயிலில் இருந்த ஆயிரத்து 50 பயணிகள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், மும்பை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்த மக்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.