தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் நாளைக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்குதல், வாக்குச்சீட்டுகளில் சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வாக்குப்பெட்டியை கைப்பற்றுதல் போன்ற காரணங்களால் 30 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம் சிட்லிங், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 வாக்குச்சாவடிகள், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சென்னகாரம்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளன. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடி, பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடி, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 வாக்குச்சாவடிகள், தூத்துக்குடி மாவட்டம் சாத்தாங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 30 வாக்குச்சாவடிகளில் நாளைக்குள் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version