கலையரங்கத்தை புனரமைப்பு செய்வதில் முறைகேடு – சிபிஐ வழக்குப்பதிவு

நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, கலாசேத்திரா முன்னாள் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.

சென்னை கலாசேத்திராவில் உள்ள கோத்தம்பலம் என்ற கலையரங்கத்தை புனரமைப்பு செய்வதில், முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு கோத்தம்பலம் கலை அரங்கத்தின் அப்போதைய நிர்வாகிகள் தலைமையில், 7 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில், அதிகமாக நிதி பெற்று, மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய நிர்வாகிகள் மீது மத்திய கலாச்சாரத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய கணக்காயர் துறை ஆய்வு செய்தது. மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந் தேதி, மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை மதிப்பீடு செய்து, முறைகேடு நடந்ததை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில், முன்னாள் நிர்வாகிகள் மீது சிபிஐ தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

அப்போதைய கலாசேத்திரா நிர்வாகிகளான, இயக்குனர் லீலா சாம்சன், துணை இயக்குநர் கருணாகர கே. மேனன், தலைமை கணக்காயர் டி.எஸ்.மூர்த்தி, கணக்கர் ராமச்சந்திரன் மற்றும் பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Exit mobile version