கோவையில் நிறைவேற்றப்பட உள்ள 24 மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் குறித்து தவறான விமர்சனங்கள் பரப்பப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள காந்தி பூங்கா, தமிழக அரசு சார்பில் 3 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி திறந்து வைத்தார். புனரமைக்கப்பட்ட இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம், வெள்ளி நீருற்று, மூலிகை தோட்டம், யோகா மையம் உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தீர்மானம் போடப்பட்டு, அப்படியே விடப்பட்டநிலையில், அதனை தற்போது அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இதனால், அதனை பற்றி தவறான விமர்சனங்களை திமுக எழுப்பி வருவதாக அவர் தெரிவித்தார். யார் எந்த விமர்சனங்கள் தெரிவித்தாலும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.