மசூத் ஆசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவர் என்றால் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். புல்வாமாவில் நிகழ்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஓட்டெடுப்பு நடத்தின.

மேலும், மசூத் ஆசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் இல்லாத நாடாக மாற்றினால், அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அந்நாட்டுடன் இணைந்து செயல்பட தயாராகவும் உள்ளதாக தெரிவித்தார்.

இம்ரான்கான் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவராக இருந்தால், மசூத் ஆசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியுமா என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version