பெண் பக்தர்களுடன் விரைவில் சபரிமலை செல்லவுள்ளதாக சமூக ஆர்வலர் த்ருப்தி தேசாய் அறிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதில் கேரள அரசும் தேவசம் போர்டும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் த்ருப்தி தேசாய் , விரைவில் பெண் பக்தர்களுடன் சபரிமலைக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். தற்போது பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார். சபரிமலை கோயிலுக்கு வழிபட வரும் பெண்களை வரவேற்குமாறு போராட்டத்தை நடத்திவருபவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே த்ருப்தி தேசாயின் இந்த அறிவிப்பு எரிகிற தீயில் நெய்யை ஊற்றுவதற்கு சமம் என எதிர்ப்பாளர்கள் விமர்சித்துள்ளனர்.