இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் போன்ற அதிமுக்கிய நபர்களுக்காகத் தயாராகி வரும் ‘ஏர் இந்தியா ஒன்’ – சிறப்பு விமானங்கள் குறித்து அறிவோம், இந்த செய்தித் தொகுப்பின் மூலம்…
அமெரிக்க அதிபர் பயணிக்கும் விமானம் ‘ஏர்போர்ஸ் ஒன்’ என்று அழைக்கப்படுகின்றது. தற்போது போயிங் 747-200-பி ரக விமானமே ஏர்போர்ஸ் ஒன் விமானமாக உள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த விமானத்தை ஏவுகணைகளால் கூட தாக்க முடியாது என்பது இதன் தனிச்சிறப்பு.
அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தைப் போலவே, இந்திய தலைவர்களுக்கும் மிகப் பாதுகாப்பான விமானம் ஒன்றைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்தியப் பிரதமர் மோடி போயிங் 747 ரக விமானங்களைத்தான் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தி வருகிறார் என்ற நிலையில், இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் – ஆகியோருக்காக பிரத்யேக
விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபரின் விமானம் ஏர்போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுவதைப் போலவே, இந்திய தலைவர்களுக்கான இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் – என்று அழைக்கப்படும்.
தற்போது இரண்டு ஏர் இந்தியா ஒன் விமானங்களை உருவாக்கும் பணி அமெரிக்கவில் நடைபெற்று வருகின்றது. இதற்காக இரண்டு 777-300 ஈ ஆர் ரக விமானங்கள் வாங்கப்பட்டு, அவற்றை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
242.3 அடிகள் நீளம் கொண்ட 777-300 ஈ ஆர் ரக விமானங்கள் பொதுவாக 342 இருக்கைகளைக் கொண்டவை. இந்த இருக்கைகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டு, கூட்ட அரங்கம், பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, படுக்கை அறை, மருத்துவக்குழு
தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக கடந்த பட்ஜெட்டில் 810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
143 டன் எடை கொண்ட இந்த விமானத்தினால் 43,100 அடி உயரம் வரை பறக்க முடியும். இவற்றில் உலகின் தலைசிறந்த இரட்டை எஞ்சின் வகையான ஜி.ஈ.90 115 பி.எல். (GE90-115BL) இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஏவுகணைப் பாதுகாப்புத் தொழில்நுட்பமான எஸ்.பி.எஸ். (SPS – Self Protection Suites) இதில் உள்ளது. எனவே ஏவுகணைகளால் இந்த விமானத்தை தாக்க முடியாது. அத்தோடு எதிரிகளின் ரேடார்களைக் கூட இதனால் செயலிழக்க வைக்க முடியும். இந்தத் தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட முதல் விமானங்களாக இவை இருக்கும். இந்தத் தொழில் நுட்பத்திற்காக மட்டும் 190 மில்லியன் டாலர்களை இந்தியா செலவிட்டு உள்ளது.
இந்த இரண்டு விமானங்களுக்கான செலவு மதிப்பீடு 1.18 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் ஆகும்.
இந்த விமானங்கள் வரும் ஜூலை மாதத்தில் இந்தியா வசம்ஒப்படைக்கப்படவுள்ளன. ஏர் இந்தியா ஒன் விமானங்களை இந்திய விமானப்படை விமானிகளே இயக்க உள்ளனர். இதற்காக 6 விமானப்படை விமானிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.