46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது: சத்யபிரதா சாகு

மாதிரி வாக்குப்பதிவை முறையாக அழிக்காத்தால் 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த சத்யபிரதா சாஹூ, தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் தேவையிருந்ததால் பயன்படுத்தாத இயந்திரங்கள் கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார். தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஈரோடுக்கு 20 விவிபேட் இயந்திரங்களும் கோயமுத்தூரில் மாற்றம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படியே மாற்றம் செய்ததாக அவர் தெரிவித்தார்.

மாதிரி வாக்குப்பதிவுக்கு போடப்பட்ட வாக்குகள் முறையாக அழிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட சத்யபிரதா சாஹூ, 13 மாவட்டங்களில் 46 வாக்குசாவடிகள் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கடந்த 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறினார். எனவே 46 மறுவாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வாக்குசாவடிகள், கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 1 வாக்குச்சாவடி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version