காஷ்மீரில், குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதனையடுத்து அம்மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, அங்கு இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே, நேற்று எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைபேசி சேவைகள் மற்றும் 2ஜி இணைய சேவைகள், தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன.