தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி பயிற்றுநர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. இதில் 7 ஆயிரத்து 546 ஆண்கள், 23 ஆயிரத்து 287 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓரிரு ஆய்வகங்களில் ஒருசிலர் தேர்வு எழுத முடியவில்லை. இதையடுத்து தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வை நிறைவு செய்யாதவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு நாள் மற்றும் மையம் தொடர்பான தகவல் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.