திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையானது 300 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணமலையில் இன்று நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைக் கூறினார்.
யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்; கொலைகளை மறைத்ததாக அறிக்கை வெளியிடுவது பச்சைப் பொய்; யார் பச்சைப்பொய் பேசுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன்தான் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விவரித்தார்.
ரூ.260 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்புப் பணிகளில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் அனைத்து மாவட்டங்களிலும் நோய் கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துவருகிறது என்றும் இறப்புவிகிதம் குறைந்துவருகிறது என்றும் அவர் கூறினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3, 433 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 1,45,299 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சர் குறைதீர்ப்புக் கூட்டம் மூலம் பொதுமக்களிடமிருந்து 46,841 மனுக்கள் பெறப்பட்டு 35,050 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரூ.38 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும், 25.51 கோடியில் திருவண்ணாமலை பகுதியில் உணவுப் பூங்கா அமைக்க அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். பிரதமரின் கிசான் திட்ட முறைகேடுப் புகார் குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தொழில் வளம் பெறுவதற்கு சாலை வசதி இன்றியமையாதது எனக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசின் திட்டம் எனவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.