ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய இடைத்தரகர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் விருப்ப ஒய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர், கொல்லிமலையை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய ஒட்டுநர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இடைத்தரகர்கள் ஹசீனா, பர்வீன், லீலா, செல்வி, அருள்சாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஈரோட்டை சேர்ந்த அருள்சாமி, லீலா மற்றும் செல்வி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி கடந்த 13ஆம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி இளவழகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக் காட்டிய சிபிசிஐடி போலீசார், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனையேற்று 3 பேரின் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.