நண்டுகளின் தீவு என அழைக்கப்படுவது பல்வேறு வகை ஆபூர்வமான விலங்குகள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கியதுமான கிறிஸ்துமஸ் தீவு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ஆஸ்திரேலியாவிலிருந்து 3400 கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ளது கிறிஸ்துமஸ் தீவு. ஆஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தீவில் 2000 குடும்பங்கள் வசிக்கின்றன. தீவின் வடக்கில் உள்ள பிளையிங் பிஸ் கோவ் நகரம் கிறிஸ்துமஸ் தீவின் தலைநகராக உள்ளது. ஆஸ்திரேலியா பூர்வ குடிகள், சீனர்கள், இந்தியர்கள் என பலதரப்பட்ட மக்கள் இத்தீவில் குடியேறியுள்ளனர். ஆங்கிலம் மலாய் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. கிறிஸ்துமஸ் அன்று இத்தீவை வந்ததடைந்த பிரிட்டிஷார் கிறிஸ்துமஸ் தீவு எனப் பெயர் சூட்டினர்
1600ம் ஆண்டுவரை மனிதர்களால் அறியப்படாத இத்தீவு பல அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இத்தீவின் மூன்றில் இரண்டு பங்கு நிலத்தில் தேசிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பாஸ்பேட் தாதுப் பொருள் அதிகளவு உள்ள கியுனோ என்கிற வெள்ளை மணல் இத் தீவின் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. 1899 ஆம் ஆண்டு முதல் இங்கிருந்து வெள்ளை மணல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
1643ம் ஆண்டு முதல் இத்தீவு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் போது இத்தீவை கைப்பற்ற ஜப்பான் படைகள் போர் தொடுத்தாகவும் தாக்குதலில் இருந்து தப்பிக்க வெள்ளைக் கொடி ஏற்றிய பிரிட்டிஷார், ஜப்பான் படைகள் சென்ற சில மணி நேரங்களில் மீண்டும் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் தீவை சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து 1958 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வாங்கியது. இந்த தீவு 19 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 15 கிலோமீட்டர் அகலம் கொண்டது. கடலுக்குள் அமைந்திருக்கும் மிகப் பெரிய மலையின் நீட்சி தான் தீவாக உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 4500 மீட்டர் உயரமுள்ள மலையில் 4200 மீட்டர்கள் கடலுக்கடியில் உள்ளதும் 300 மீட்டர் மட்டுமே வெளியில் காணப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, மலேசியா, சீனாவை பூர்வீகமாக கொண்டவர்கள் அதிகமாக உள்ளதால் மாறுபட்ட கலாச்சாரம் காணப்படுகிறது. இதேபோல் பல்வேறு மதங்களும் இத்தீவில் காணப்படுகின்றன.
கிறிஸ்மஸ் தீவில் 30-க்கும் மேற்பட்ட ஆபத்தான குகைகள், அரிதான தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இதேபோல் கிறிஸ்மஸ் தீவைச் சுற்றியுள்ள கடலில் அபூர்வமான கடல்வாழ் உயிரினங்களும் வசிக்கின்றன.
இத்தீவின் தேசிய பூங்காவில் 25க்கும் மேற்பட்ட இன மரங்கள் காணப்படுகின்றன. 135 வகை செடிகள் காணப்படுகின்றன. அவற்றில் 18 வகையான செடிகள் வேறு எந்தத் தீவிலும் இல்லை. பறக்கும் நரிகள் என அழைக்கப்படும் வெளவால்கள் இத்தீவில் மட்டுமே உள்ளன. நரிகளைப் போன்ற முகத்தோற்றம் கொண்டுள்ள இந்த வெளவால்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்டு தீவு என்ற பெயருக்கு ஏற்ற வகையில் 20க்கும் மேற்பட்ட அரிய வகை நண்டுகள் இந்த தீவில் காணப்படுகின்றன. இதில் தென்னை நண்டுகள் மற்றும் சிவப்பு நண்டுகள் மிகவும் பிரபலமானவை. தென்னை நண்டுகள் தேங்காய் ஓடுகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான சிகப்பு நண்டுகள் இத்தீவில் காணப்படுகின்றன. ஈரப்பதமிக்க நிலங்களில் குறைந்த வெப்பநிலையில் வாழும் தன்மை கொண்ட இவை ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்கத்திற்காக தீவின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயருகின்றன.
பல்வேறு உயிரினங்கள், தாவரங்களைக் கொண்டு உலகின் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசமாக இத்தீவு திகழ்கிறது.