மலையாளத்தில் பிறந்த மங்கல தமிழ் வாத்தியத்திற்கு எம்எஸ்வி என்று பெயர். ஆம், பூர்விகம் மலைநாடு என்றாலும் வாரி தழுவிக் கொண்டது என்னவோ தமிழ்நாடு தான். சி.ஆர். சுப்புராமன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களிடம் ஆரம்ப இசையை பயின்ற எம்எஸ்வியின் திறமைக்கு பரிசாக கிடைத்த வாய்ப்பு தான் 1952 பணம் என்ற திரைப்படம். அதிலிருந்து துவங்கியது எம்எஸ் விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி மெல்லிசைக் கூட்டணி. 1965க்கு பிறகு தனித்து பயணித்த போதும் தனக்கென ஒரு இசை பாணியை தகவமைத்துக் கொண்டார் எம்எஸ்வி.
பாடல்களுக்கான மெட்டுகளை எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கும் எம்.எஸ்.வி, அதன் இசை கோர்ப்புகளில் இன்னும் இன்னும் பல மென்மைகளை புகுத்தி கேட்பவர்களை மதிமயக்கும் வல்லமை கொண்டவராகத் திகழ்ந்தார். தாளமும் லயமும் கைக்கோர்த்து தாலாட்டுப் பாடுவதைப் போன்று, பாடல்களில் இடையில் ஒலிக்கும் எம்.எஸ்.வியின் இடையிசை, தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களின் நளினத்திற்கு இணையாக ரசிகர்களின் மனதை வருடிவிடும் தன்மை கொண்டது. மூன்றே மூன்று இசைக் கருவியில் முத்தமிழை முத்தமிட்ட அவரே, 300 இசைக் கருவிகளின் ஆர்ப்பாட்டத்தோடு தமிழின் இனிமையை உலகறியவும் செய்தார்.
மெலடி பாடல்களில் மனதை மயக்குவதும், காதல் பாடல்களில் கனிரசம் சொட்ட செய்வதும் எம்.எஸ்.வியின் அக்மார்க் முத்திரைகள். ஏழு ஸ்வரங்களுக்குள் இசையின் அனைத்து அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டிய அவர், ஆர்மோனியத்தில் நடனமாடும் தனது விரல்களால், கோடான கோடி ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். உலக இசையை அதே பிரமாண்டத்துடனும், இசைப் பிரியர்களின் மனதிற்கு நெருக்கமாகவும் உணரச் செய்தவர்களில் முதன்மையானவரும் எம்.எஸ்.வியே என்றால் அது மிகையாது.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரஹ்மான்