மன்னார் வளைகுடா பகுதியில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை டால்பின்கள்!!

மன்னார் வளைகுடாப் பகுதியில் அரிய வகை டால்பின்கள் வேகமாக அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்க, ஸ்கூபா டைவிங் வீரர்களை களமிறக்கி உள்ளது மன்னார் வளைகுடா உயிர் காப்பகத் துறை. அதுபற்றிய ஒரு சிறப்புப் பார்வை…

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வரை அமைந்துள்ள கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமையும் இந்தப் பகுதிக்கு உண்டு.

இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல் பசு மற்றும் டால்பின்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, “ஓங்கி எனப்படும் கூன்முதுகு ஓங்கி உள்ளிட்ட அரியவகை டால்பின்கள் இந்தப் பகுதியில் வாழ்கின்றன. சமீபகாலமாக, இந்த டால்பின்கள் படகுகளில் மோதியும், மீனவர்களால் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் அழிந்து வருகின்றன. இதைத் தடுப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங் அடித்து, கடலுக்குள் நீந்திச் சென்று அங்குள்ள பவளப் பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய வனச்சரகர் சதீஷ், டால்பின் மீன்கள் மீனவர்களின் வலைகள் மற்றும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சாப்பிட்டு, அதன் காரணமாக இரைப்பை பாதிக்கப்பட்டும், அதிக இரைச்சலுடன் செல்லும் படகுகளாலும் டால்பின்கள் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அதைத் தடுக்கும் நோக்கில், மன்னார் வளைகுடாவில் கடலில் மிதக்கும் மற்றும் கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், மன்னார் வளைகுடா கடல் உயிரின காப்பாளர் துறை சார்பாக, ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் மாதம்தோறும் கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக்குகள் அகற்றப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது, சேதம் அடையும் பல வலைகளை கடலுக்குள் வீசி எறியாமல் அதை கரைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் எனவும், மீனவர்கள் விசில் சப்தம் எழுப்பி டால்பின்களை படகுக்கு பின்னாலே வரவழைக்கக் கூடாது என்றும், அப்படி வரும்போது, அவை படகில் அடிபட்டு மரணமடைகின்றன என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

அரியவகை டால்பின் இனங்கள் கடலின் சொத்து மட்டுமல்ல… அது மீனவர்களின் உற்ற நண்பனும்கூட… எனவே, அவற்றின் அழிவைக் காப்பது ஒவ்வொரு மீனவரின் கடமை என்பதே உண்மை!

Exit mobile version