மூன்று அரிய வானியல் நிகழ்வுகள் இன்று ஒரே நாளில் நிகழ உள்ளது.
வானில் இரண்டு வான்பொருட்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு ஒருங்கமைவு என அழைக்கப்படுகிறது. அவ்வாறு, வியாழன் கோளும் சனி கோளும் பூமிக்கு அருகே ஒரே நேர்க்கோட்டில் வரும் ஒருங்கமைவு நிகழ்வு இன்று நிகழ்கிறது.
இந்த ஒருங்கமைவின்போது, பூமிக்கும் வியாழன் கோளுக்கும் இடைப்பட்ட தொலைவு 88.6 கோடி கிலோ மீட்டர் ஆகவும், சனி கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 162 கோடி கிலோ மீட்டர் ஆகவும், இரண்டு கோள்களுக்கும் இடைபட்ட தொலைவு 73 கோடி கிலோ மீட்டர் தொலைவாகவும் இருக்கும். இரு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் ஒளி மிகுந்து ஒரு கோள் போல காட்சி தரும்.
சூரியன் மறைந்த பின், மேற்கு திசையில் பார்த்தால் இரண்டு பிரகாசமான ஒளி புள்ளிகளை காணலாம். இந்த நிகழ்வு 397 ஆண்டுகளுக்கு முன்பாக, கடந்த 1623ம் ஆண்டு நிகழ்ந்தது. மீண்டும் இதே போன்று ஒரு நிகழ்வு 2080ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நடைபெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், சூரியன் தென்கோடிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறது. சூரியன், மகர ரேகைக்கு நேராக ஒளிர்வதுடன், பூமியின் வடபகுதியில் கடும் குளிர் காலமாகவும், நீண்ட இரவு பொழுதாகவும் இருக்கும்.
மேலும் இன்று இரவு ஓர்சிட்ஸ் என்ற எரிகற்கள் பொழிவும் நிகழ உள்ளது. விண்மீன் மண்டலத்திலிருந்து மணிக்கு 10 வகையான எரிகற்கள் பல்வேறு திசையில் செல்வதையும் காணலாம்.
வானம் என்ற திறந்த வெளி அருங்காட்சியகத்தில் நிகழும் இதுபோன்ற சில அரிய வானியல் நிகழ்வுகளை சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் வெறும் கண்ணால் பாதுகாப்புடன் கண்டுகளிக்கலாம் என்கின்றனர் வானியலாளர்கள்.