பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல், செப்டம்பர் 17ம் தேதி வெளியீடு!

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல், செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்களை, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் நடப்பாண்டு உயர்த்தப்படாது என தெரிவித்தார். மாணவர்கள் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version