உலக அளவில் சிறந்த 200 பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

உலக அளவில் சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 25 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. பிரிட்டனின் ‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் எமர்ஜிங் எகனாமீஸ்’ என்ற நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி மிகச்சிறந்த 200 பல்கலைகழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் பல்கலைகழகங்கள் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இந்த வரிசையில் இந்தியாவின் 25 பல்கலைகழகங்கள் இடம்பெற்றுள்ளன.

பெங்களூரின் இந்திய அறிவியல் கழகம் பட்டியலில் 14வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை ஐஐடி 27வது இடத்தையும், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஐஐடி 61வது இடத்தையும் ஜே.எஸ்.எஸ். அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் நிறுவனம் 64வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலின் முதல் 40 இடங்களில் ரூர்க்கி ஐஐடி 35வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்கள் உலகளவில் வெற்றிக்கான மகத்தான ஆற்றலை பெற்றுள்ளதாக டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் எமர்ஜிங் எகனாமிஸ் நிறுவனத்தின் எல்லி போத்வெல் தெரிவித்துள்ளார்.

ஆனால் உலகளாவிய சராசரிக்கு பின்னால் இந்த நிறுவனங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதை வலுப்படுத்துவதன் மூலம் உயர்கல்விக்கான நற்பெயரை உலகளவில் உயர்த்தவும், சர்வதேச மாணவர்களை ஈர்க்கவும் முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version