இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். மேலும் நாடாளுமன்றத்தையும் முடக்கி உத்தரவிட்டார். அப்போதிலிருந்து இலங்கை அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.
ஜனநாயகத்தை அதிபர் சிறிசேனா நசுக்குவதாக உலகளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வரும் 14-ம் தேதி ராஜபக்சே நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருந்தது. பெரும்பான்மை கிடைக்கின்ற சூழல் அமையாததால் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் எனவும் அறிவித்தார். சிறிசேனாவின் இந்த முடிவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டணி, ஜனதா விமுக்தி பெராமுனா உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது.