கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில், கச்சத்தீவுக்கும்- நெடுந்தீவுக்கும் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
50க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை விரட்டி அடித்ததோடு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, 6 படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 43 மீனவர்களையும் கைது செய்து, நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த செய்தி ராமேஸ்வரம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்