திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
ரமேஷ் கண்ணா (நடிகர்)
“யாரையும் கடுஞ்சொல் சொல்லி பேசாதவர். எப்போதும் அவரை நான் சிரித்த முகத்துடனே பார்த்திருக்கிறேன். எளிமையான குணம் படைத்தவர். சிறிய விஷயமாக இருந்தாலும், மற்றவர்களை பாராட்டும் மனம் கொண்டவர். அவருடனான நினைவுகளை என்றும் என்னால் மறக்கமுடியாது.”
ஷாஜி (இசை விமர்சகர்)
எஸ்.பி.பி.யின் பாடல், குரலால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். தமிழ் மட்டுமில்லாது மற்ற மொழிகளிலும் பாடலில் கோலோச்சியவர். அவருக்கு நிகராக யாருமில்லை. என்னுடைய பதின்பருவம் முழுக்க அவரது பாடல்களால் நிரம்பியிருக்கிறது. துள்ளலான, உற்சாகமான, நம்பிக்கைதரும் பாடல் முறையாக இருந்தது. அவரது பாடல் முறை. வாழ்வில் சோர்ந்து போகும்போது, நம்பிக்கை தரும் பாடல்கள் அவருடையது. சோகப்பாடல் பாடும்போதும், அவருக்கே உண்டான தனித்துவத்துடன் பாடுவார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவருடன் தொடர்பு இருந்தது. வாழ்க்கையில் எந்த சூழலிலும் சோர்வடையாதவர். மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். இப்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது பாடல்கள் வழியே நம்முடன் இருப்பார். கலைஞர்களுக்கு மரணமில்லை!” என்று தெரிவித்துள்ளார்.