ராமநாதபுரம் அருகே தொண்டி பேரூராட்சியில் உள்ள ஊரணியில் குடிமராமத்து பணி தொடங்கியது.
நீராதாரங்களை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில், நீர்வள ஆதார அமைப்பின் மூலம் 37 புள்ளி 59 கோடி ரூபாய் மதிப்பில் 69 பாசன கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல், வரத்து கால்வாய்களை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் ஒரு கட்டமாக, தொண்டி பேரூராட்சியில், கைக்குலவர் ஊரணி வறண்டு முட்செடி மண்டியிருந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பேரூராட்சி அதிகாரிகள் ஊரணிகளை சுத்தப்படுத்தி மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.