ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், அரசு பள்ளி இயங்கி வருவதால், கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர் .
அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கும் என்ற போலியான பிம்பம் காரணமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துவரும் நிலையில், இந்த பிம்பங்களையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகிறது ராமநாதபுரம் அருகே உள்ள கடலாடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி.
மாணவர்கள் தனியார் பள்ளிகளை தேடி செல்லக்கூடாது மற்றும் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அரசு பள்ளிகளில் புது புது முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலாடி அரசு பள்ளியில் பழைய கட்டிடத்திற்கு பல வண்ணங்கள் அடித்து, கார்ட்டூன் பொம்மைகள் வரைந்து பள்ளி பளிச்சிடுகிறது. மாணவர்கள் அமர சேர், பெஞ்ச், மின் விசிறி வசதி, அரசு வழங்கிய சீருடையுடன் பெல்ட், படிப்பதற்கு நூலகம், இயற்கை தின்பண்டங்கள், மாதம் ஒரு பழம் திட்டம், சிறுசேமிப்பு பழக்கம், மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல புதுமையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நவீன முறையில் பள்ளியை மாற்றி வருவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்
துரித உணவு பண்டங்களுக்கு மாற்றாக, பள்ளியில் நேர்மை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இங்கு உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை மிட்டாய் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள காசு பாத்திரத்தில் காசை போட்டு மாணவர்கள் மிட்டாய்களை எடுத்து கொள்ளலாம் என அப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகிறார். பனை ஓலை மூலம் விசிறி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோல் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.