ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், கடந்த 1991-ம் ஆண்டு முதன்முதலில் அசாம் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து 28 ஆண்டுகளாக அவர் அசாம் மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
அவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம், கடந்த ஜூன் 14-ந் தேதி முடிவடைந்தது. அவரை அசாமில் இருந்து மீண்டும் தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ. பலம் இல்லாததால் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவெடுத்திருந்தது.
இந்தநிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன்லால் சைனி அண்மையில் காலமானார். அதனால் அந்த காலியிடத்துக்கு ஆகஸ்டு 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் அவருடன் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மன்மோகன் சிங்கை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை போட்டி இருந்தால், 26ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.