பாதுகாப்புப் படையின் கப்பலை தனது குடும்பத்தின் டாக்ஸியாகப் பயன்படுத்தினார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்று பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டை, அக்கப்பலில் பணியாற்றிய ஒருவரே உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ளது, காங்கிரஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையான ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தனது குடும்பத்தின் சொந்த டாக்ஸி போல பயன்படுத்தினார் என்றும், அச்சமயத்தில் நாட்டின் கடல்சார் எல்லைப் பகுதிகளை பாதுகாத்துக் கொண்டிருந்த ஐ.என்.எஸ் விராட் கப்பல் ஒரு குடும்பத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்கு உள்ளானதாகவும் கூறினார்.
முதலில் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் ஆதாரப் பூர்வமற்றது என்று மறுத்தது. ஆனால் 1988ஆம் ஆண்டின் ஜனவரி 31ஆம் தேதியில் வெளியான இந்தியா டுடே ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு கட்டுரையில், மூத்த செய்தியாளர் அனிதா பிரதாப் இது குறித்து புகைப்படங்களோடு விளக்கி இருப்பது இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்தக் கட்டுரையில் 1987ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரியங்காவின் 4 நண்பர்கள், சோனியா காந்தியின் சகோதரி, அம்மா மற்றும் மாமா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் – உள்ளிட்ட பலரும் லட்சத்தீவிற்கு சுற்றுலா சென்றதும், அங்கு அவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு ஐ.என்.எஸ்.விராட் கப்பலைப் பயன்படுத்தியதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. தவிர இவர்களின் பாதுகாப்புக்காக அரசின் நீர்மூழ்கிக் கப்பல்களும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையால் காங்கிரசின் குட்டு வெளிப்பட்டது. இருந்தாலும் அந்த செய்தி பொய்யானது என்றே காங்கிரஸ் தரப்பு மறுத்து வந்தது. இந்நிலையில் ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி பிரஃபுல்லா குமார் பத்ரா டுவிட்டரில், ’பிரதமர் மோடி சொன்னது அத்தனையும் உண்மை. அதற்கு நானே கண்ணால் பார்த்த சாட்சி’ – என தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் தரப்பின் நெருக்கடியை இன்னும் அதிகரித்து உள்ளது.
இதனால், ‘அரசுப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமரை சுற்றுலா செல்வதாக விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர், சுற்றுலாவுக்கு இந்தியப் பாதுகாப்புத்துறையின் கப்பலைப் பயன்படுத்தி உள்ளது சரியா?’ – என்று மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் காட்டமாகக் கேட்கத் தொடங்கி உள்ளனர்.