ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், முருகன் மீண்டும் சிறையில் உண்ணாவிரதம் இருப்பார் என அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் காலதாமதம் செய்து வருவதாக கூறி, வேலூர் மத்திய சிறையில் முருகன் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர், சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இந்த நிலையில் முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முருகன் சார்பாக ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியிருப்பதாக கூறினார். 7 பேர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதம் இருந்து மரணமடைய அனுமதி கொடுக்குமாறு முருகன் அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாக புகழேந்தி தெரிவித்தார்.