ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து, ஆளுநரே சட்டப்படி முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கும்படி, கடந்த 2018ம் ஆண்டு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் தாக்கல் செய்த பதில் மனுவில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றும், 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.