ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் கவனக்குறைவால் டிசம்பர் மாதம் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளன இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் ஜெ.கே.லோன் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகளவில் நிகழ்ந்ததால் மருத்துவமனை, நிர்வாக குழு அமைத்து விசாரணை நடத்தினர். அதன்படி, பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஆய்வு நடத்தப்பட்ட ஆய்வில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதிலும், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது சராசரியாக நாள் ஒன்றிற்கு 3 குழந்தைகள் பிறந்த உடன் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை மிக மோசமான நிலையில் குழந்தைகள் கொண்டு வரப்படுவதே உயிரிழப்பிற்கு காரணம் என மருத்துவமனை சார்பில் பதிலளிக்கப்பட்டது.
ஆனால், போதிய ஆக்சிஜன் இல்லாததும், தொற்று பாதிப்பு உள்ளிட்டவைகள் குழந்தைகள் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.