திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜராஜ சோழன் ஆட்சி காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே பழங்கால கல்வெட்டு உள்ளதாக வரலாற்று ஆசிரியர் செல்வகுமார் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கோவில் பாறையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டானது இராஜராஜசோழனின் 2 ஆம் ஆட்சியாண்டான 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் நக்கன் மாதானியன் என்பவன் 45 ஆடுகள் தானமாக அளித்த செய்தி கல்வெட்டாக உள்ளதகாவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், இதே ஊரில், 15 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு கல்வெட்டு உள்ளதாகவும்,காமகோட்டமுடைய பெரிய நாச்சியாரின் கல்வெட்டு என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இராஜராஜன் காலம் முதல் நாயக்கர் காலம் வரை கல்வெடுகள் இவ்வூரில் காணப்படுவதால் இக்கோவிலை புனரமைக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.